இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலிக்கு கழுத்தில் ஏற்பட்டுள்ள உபாதையையடுத்து அவர் இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி அணியில் இணைந்து விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி குறித்த உபாதையிலிருந்து மீண்டு வர 3 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஜுன் 15-ம்திகதி நடத்தப்படும் உடற் தகுதித் தேர்வுக்குப் பின்புதான் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என இந்திய கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இந்த உடற் தகுதித் தேர்வுக்குப் பின்புதான் ஜூன் இறுதியில் நடைபெறவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான இரு இருபதுக்கு இருபது போட்டியில் கோலி பங்கேற்பாரா என்பது குறித்து கூற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கோலி 9 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகளில் மற்றும் 9 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது