குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் உள்ள குற்ற தடுப்புப்புலனாய்வு பிரிவினருக்கு தமக்கு பின்னால் சுற்றுவதை தவிர வேறு வேலை தெரியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 66 அவது அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டத்தில் நடைபெற்றது.
அதன் போது வடமாகாணத்தில் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையில் முன்னேடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க என வடமாகாண சபையினால் குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரணை அறிக்கையை கடந்த 8ம் திகதி சபையில் சமர்ப்பித்தது.
குறித்த குழு 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி நியமிக்கபட்டது. கடந்த 23 மாத விசாரணையின் பின்னர் அன்றைய தினமே அறிக்கை சமர்ப்பித்தது. குறித்த அறிக்கையை தாம் கணக்காய்வாளர் நாயகத்திற்கும் , வடமாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பி நடவடிக்கைக்காக அனுப்பி வைத்து உள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர் தான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்குடன் அது தொடர்பில் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு பதிவு செய்து உள்ளதாக தமக்கு அறிவித்து உள்ளார் எனவும் அவைத்தலைவர் சபையில் தெரிவித்தார்.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , வடமாகாண குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு செய்து எந்த பயனும் இல்லை அவர்கள் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க போறதில்லை. அவர்கள் எங்களுக்கு பின்னால் திரிந்து நாம் என்ன செய்கிறோம் என்பதனை கண்காணிக்கும் வேலையை தவிர வேறு வேலை செய்ய மாட்டார்கள். எனவே நெல்சிப் ஊழல் தொடர்பில் பெருங் நிதிக் குற்ற பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.