இந்திய கடலோர காவல் படையை, தற்போதைக்கு மத்திய உள்துறை அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் 7 ஆயிரத்து 516 கி.மீ. நீளம் கொண்ட கடல் பகுதியை இந்திய கடலோர காவல் படை தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிடவற்றில் இருந்து பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர காவல் படையை மத்திய உள்துறைக்கு மாற்ற வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் அடங்கிய குழு கடந்த ஆண்டு இறுதியில் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சு அது தொடர்பில் பாதுகாப்புத் துறையின் கருத்தை கோரிய நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
இந்திய கடல் பகுதியை பாதுகாப்பதில் கடலோர காவல் படை வீரர்களின் பங்களிப்பு முக்கியமானது எனவும் கடற்படையும் கடலோர காவல் படையும் இணைந்து பணியாற்றுவது நாட்டுக்கு மிகவும் அவசியம் தெரிவித்தே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டிலும் இதே கோரிக்கையை உள்துறை அமைச்சு முன்வைத்தபோதும் பாதுகாப்பு அமைச்சு மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது