தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் ஆணை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், முடக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களை பார்வையிட்டு காயங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஏ.ப்பி.சூரியபிரகாசம் தமிழக அரசுக்குக்கும், சிபிஐ-க்கும் மனு அனுப்பி இருந்தார்.
அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததால், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிமன்றம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்கவும், சிபிஐ-க்கு ஆணை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 30-ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
இதேவேளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவசர வழக்காக எடுக்கக் கோரப்பட்ட இந்த மனு வரும் திங்கள்கிழமை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.