ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் ( Mariano Rajoy )அரசியல் ரீதியாக கடும் சவால்களை எதிர்நோக்கி வந்துள்ள நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் போதிய வாக்குகளை பெற தவறிய மரியானோ ராஜோய், பிரதமர் பதவிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 180உறுப்பினர்களும், எதிராக 169 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பழமைவாத கட்சியின் தலைவரான மரியானோ ராஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக கடமையாற்றி வந்திருந்தார். நவீன ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ராஜோய் ஆவார்.
தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ரஜோய் ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் பிரதமர் அரசியல் ரீதியாக கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்
May 26, 2018 @ 03:49
ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் ( Mariano Rajoy )அரசியல் ரீதியாக கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இடைத் தேர்தலை நடத்துமாறு கோரப்படுவதுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பிரதமர் மரியானோ ராஜோய் கடுமையான அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிக் கொள்வதாகவும் முன்கூட்டி தேர்தல் நடத்தப்படாது எனவும் மரியானோ ராஜோய் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.