213
குளோபல் தமிழ்ச் செய்திகள்..
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தனியார் காணிகளை விடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் காணி விடுவிப்பு தொடர்பில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படையின் அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டார்.
ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
குறித்த சந்திப்புக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
காணிகள் தொடர்பில் பிரதமர் கேட்டறிந்தார்.
குறித்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முப்படைகள் வசம் உள்ள தனியார் காணிகள் தொடர்பில் பிரதமர் கேட்டறிந்து கொண்டார். அதன் போது வலி.வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள காணிகள், மண்டைதீவில் கடற்படை வசம் உள்ள காணிகள , நகர்புறங்களில் இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ள காணிகள் தொடர்பிலான தகவல்களை கொடுத்தோம். அதனை அடுத்து அது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் காணிகள் தொடர்பில் அறிவிப்பதாக உறுதி அளித்தார்.
பலாலி விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய காணி மீள வழங்க முடியாது.
அதேவேளை பலாலி விமான நிலையத்திற்காக கையகப்படுத்திய காணிகள் தொடர்பிலும் பேசி இருந்தோம். ஆனால் விமான நிலையத்திற்கு என கையகப்படுத்திய காணிகளை திருப்பி வழங்க முடியாது எனவும், விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த இந்திய உதவ உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலதிக காணிகளை கையகப்படுத்த மாட்டோம்.
அதன் போது விமான நிலையத்திற்கு என மேலதிக காணிகளை கையகப்படுத்த வேண்டாம் என நாம் வலியுறுத்தினோம். அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திற்கு என மேலதிக காணிகள் கையகப்படுத்த பட மாட்டாது என உறுதி அளித்தார்.
காணி விடுவிப்பு தொடர்பில் எந்த அறிவிப்பும் இல்லை.
இதேவேளை வடமாகாணத்தில் நகர் புறங்களை அண்டிய பகுதிகளில் முப்படைகள் வசம் உள்ள 600 ஏக்கர் காணி விடுவிப்புக்கான அறிவித்தல் இன்றைய தினம் பிரதமர் விடுப்பார் என மீள் குடியேற்ற அமைச்சின் தகவல்கள் தெரிவித்திருந்த போதிலும் பிரதமர் அவ்வாறான எந்த அறிவிப்பையும் வழங்கவில்லை.
Spread the love