சர்வதேச சமூகம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது – சம்பந்தன்
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்தும் நிறைவேற்றத் தவறினால் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்தக் கொண்டிருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது தொடர்பிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதற்கும் அரசாங்கம் பொறிமுறைமை ஒன்றை தெளிவாக விளக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது எனவும், நாடு செல்லும் பாதை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மை சமூகத்தை திருப்த்திப்படுத்தல்..
மேலும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றே விரும்புகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பான்மையின தலைவர்கள், மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக, கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பிற்கான தேவையை இதய சுத்தியுடன் சிங்கள மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்..
இதேவேளை அரசியல் யாப்பின் தேவை மற்றும் அதன் நன்மைகள் குறித்து பெரும்பான்மையின மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமை முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எனக் கூறிய சம்பந்தன், தேசிய பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும், அதேபோன்று இவர்கள் புதிய அரசியல் யாப்பிற்கான தேவையை இதய சுத்தியுடன் சிங்கள மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
புதிய அரசியல் யாப்பினூடாகவே நிரந்தரமான தீர்வினை அடைய முடியும்..
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான நிரந்தரமான தீர்வினை, புதிய அரசியல் யாப்பினூடாகவே அடைய முடியும். அதுமாத்திரமன்றி, நாட்டில் நிலவும் பாரிய கடன் சுமை மற்றும் பொருளாதர வளர்ச்சி உள்ளடங்கலான பல்வேறு பிரச்சினைகளுக்கும் புதிய அரசியல் யாப்பின் மூலமே தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமெரிக்க பிரதிநிதிகளின் கவனத்திற்கு சம்பந்தன் கொண்டு வந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தற்போதைய நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவர்
இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சி குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடுகள் காலம் தாழ்த்தப்படுமாயின் அல்லது பயனுள்ளதாக அமையாவிடின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தற்போதைய நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவர் என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.