குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
மருதங்கேணியில் வாடி அமைத்து வரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு தெரிவித்து பாதுகாப்பும் அளித்து வருகின்றது. என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
மருதங்கேணியில் வாடி அமைத்து மீன் பிடியில் ஈடுபட்டு உள்ள மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடாத்திய உள்ளூர் மீனவர்களை அரச படைகள் மற்றும் அதன் புலனாய்வு பிரிவினர்கள் நேரடியாகவும் , தொலைபேசி ஊடாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
வெளி மாவட்ட மீனவர்கள் அடாத்தாக மருதங்கேணி பகுதிகளில் வாடி அமைத்து வருவதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடின் உள்ளூர் மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களுடன் மோதல் நிலைக்கு செல்வார்கள் ஆயின் முழு நாட்டுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கே இன ரீதியாக பேசப்படவில்லை. யாழ்.மாவட்ட மீனவர்கள் மன்னார் மாவட்டத்திற்கு சென்று மீன் பிடியில் ஈடுபட முடியாது. அதே போலவே வெளிமாவட்டங்களில் உள்ள மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்குள் அத்து மீறி நுழைந்து வாடிகள் அமைத்து மீன் பிடியில் ஈடுபட முடியாது. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் மத்திய கடற்தொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.