இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிக அளவில் நிலவும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர். பிரபல சுற்றுலாத் தளமான சிம்லாவில், தற்போது கோடைக்காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் நீர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. இந்த நீர்வழங்கலும் நீர் வண்டிகள் முலமே மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டுள்ளதுடன் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனால் ஆத்தரமடைந்துள்ள பலர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது