புத்த கயாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையை தேசிய புலனாய்வு நீதிமன்றம் விதித்துள்ளது. 2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் உள்ள பிஹாரின் புத்த கயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதனால் இதனை புத்த மதத்தவர்கள் தங்களின் போற்றுதலுக்குரிய புனிதத் தலமாக மதித்து வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் 2013-ம் ஆண்டு புத்த கயாவில் 10 வெடிகுண்டுகள் வெடித்தமையினால் 2 பிக்குகள் உட்பட 5 பேர் காயமடைந்திருந்தனர். கோயில் பகுதியில் பதற்றத்தை உண்டாக்கவும், அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களைக் கொல்லவும் சதி செய்து அந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு நீதிமன்றம் அவர்கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது. இதில் தவுபீக் அகமது என்பவர் 17 வயதுக்குள்பட்டவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏனைய 5 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட் நிலையில் நேற்று அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபா அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.
குண்டுவெடிப்பில் உயிர்ப்பலி எதுவும் நிகழவில்லை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது