சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்ற நிலையில் அவர்களை ஒடுக்குவதற்காக சிரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று மேற்கொண்ட வான் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரித்தாகியாவினைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.