இந்தியாவின் தலைநகர் டில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள பட்டாசு விற்பனை உரிமங்களையும் ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து ஏற்பட்ட அபாயகரமான நச்சுப்புகைக்கு பட்டாசுகளும் காரணமாக இருந்ததனைத் தொடர்ந்து மூன்று குழந்தைகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சுவாசக் கோளாறு, அஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையவில்லை எனவும், பட்டாசுகள் மூலம் ஏற்படும் மேலும் மாசை தம்மால் சுவாசிக்க முடியாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
எனினும் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்துள்ள போதும் பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிப்பது சாத்தியமில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துபவை எவை என்பது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.