குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் மாவட்டத்திற்கு 14ஆயிரம் மலசல கூடம் அமைக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ். மாவட்டச் செயலக மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ் மாவட்டத்தில் மலசல கூடம் பற்றாக்குறையாக உள்ளமையால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களிற்கு தேவையின் விகிதாசார அடிப்படையில் மலசல கூடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் மலசல கூடங்கள் 14 ஆயிரம் தேவையாக உள்ளது. ஆனால் தற்போது 891 மலசல கூடங்கள் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இன்னமும் 13, 109 மலசல கூடங்கள் தேவைப்படுகின்றன. இந் நிலையில் அடுத்த கட்டமாக வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் மலசலகூடமும் சேர்ந்த்தாகவே அமையப் பெறவுள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற இந்த மலசல கூடங்களுக்கு 55 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதுமானதாக இல்லை என மக்கள் முறைப்பாடு செய்கின்றனர் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து , மலசல கூடம் அமைப்பதற்கான நிதியினை ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.