குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
வடக்கு மாகாணத்தில் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல் படையினர் காணிகளை சுவீகரிக்க முடியாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தின் போது வேலணைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை படையினர் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஒருபுறம் காணிகளை விடுவித்து வருவது போன்ற தோற்றப்பாட்டை காட்டி வருகின்ற அரசாங்கம் மறுபுறம் காணிகளைச் சுவீகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.
இதற்கமையவே மண்டை தீவில் 18 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு படையினர் கணி சுவீகரிப்பதைக் கண்டிப்பதுடன் தொடர்ந்தும் இங்கு படையினர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தனர்.
இதன் போது படையினருக்கு காணிகள் தேவை அதனை வழங்குங்கள் எனக் கொழும்பில் இருந்து அரச அதிபருக்கோ இல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அறிவுறுத்தல்கள் வந்தாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபையின் அனுமதியின்றி அதனை வழங்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படையினரோ அல்லது வேறு யாரோ காணி கேட்டால் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மண்டை தீவுக் காணியை வழங்க முடியாதெனவும் வடக்கில் எங்காவது படையிருக்காக காணி சுவீகரிப்பதானால் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமெனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.