குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்…
வடமாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்குமான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியில் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4 ஆம் மாதம் 10ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகா ணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே மேற்படி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி செயலணிக்கு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சி வஞானம் இணை தலைவராக இருப்பார். மேலும் அந்த குழுவில் அவை தலைவரும் உள்ளடங்கலாக 8 மாகாணசபை உறுப்பினர்களும், 3 அல்லது 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 11பேர் அல்லது 12 பேர் கொண்ட செயலணியாக அது அமையும்.
இச் செயலணி வடமாகாணத்தின் எல்லை பகுதியில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து அவற்றை தடுப்பதுடன், முன்னதாக அபகரிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் காணிகளை மீட்பது தொடர்பாகவும் திட்டங்களை தீட்டும். அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இந்த செயலணி ஆராயும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இச் செயலணியில் உள்ளடங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? யார்? என்பது கூறப்படவில்லை. அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.