200
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…
வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம். என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று புதன் கிழமை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அவர்களால் முடியாவிட்டால் தென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள். அதற்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்ற சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை தடைசெய்யக்கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பின்னர் றோலர் படகு தொழிலை உடனடியாக தடைசெய்யவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இணைந்து கூறுகின்றார்.
சட்டவிரோத தொழில்களை தடைசெய்ய விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் எங்களுடைய கடல்வளத்தை பாதுகாக்கும்படி எப்படி கேட்கலாம்? தென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும். என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன்போது அங்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல்வாதிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை பாரிய போராட்டம்.
அதேவேளை அடாத்தாக தங்கியுள்ள மீனவர்கள் உடனடியாக வெளியேறாது விட்டால், நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்தனர்.
Spread the love