கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயையும் குணப்படுத்தி, 6 டிப்ளோமா மற்றும் 1 பட்டப்படிப்பினையும் படித்து முடித்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தநிலையில் முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரனுக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்ட நிலையில் சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும் அதனை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார்.
அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்திய 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளோமாபடிப்புகளையும், ஒரு பட்டப்பினையும் ; படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.