குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தான் எந்த நேரத்திலும் குற்றப் புலனாய்வு விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற குற்றப் புலனாய்வு விசாரணை திணைக்களம் தன்னிடம் திகதி ஒன்றை கேட்டுள்ளதாகவும் இதுவரை சரியான திகதியை வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
காலத்திற்கு காலம் அரசாங்கம் தன்னை பழிவாங்க இப்படியான நெருக்கடிகளை கொடுப்பதாகவும் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எந்த நேரத்திலும் தன்னிடம் குற்றப் புலனாய்வு விசாரணை திணைக்களம் விசாரணை நடத்தலாம் என்பதை தான் அறிந்து இருந்தாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு விசாரணை திணைக்களம் ஏற்கனவே சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.