158
மக்கள் காதரிற்கு அஞ்சலிகள்! யாழ்.ஊடக அமையம்
10.06.2018
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் இன்று எம்மைவிட்டு பிரிந்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,பிரபல எழுத்தாளரும்,கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமாகியுள்ளார். மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குறிப்பாக யுத்த காலங்களிலும் நெருக்கடிகளிலும் தளராது தனது மரணம் வரை தனது ஊடகப்பணியினை ஆற்றியிருந்த மக்கள் காதர் தமிழ் ஊடகப்பரப்பில் என்றுமே நினைவுகூரப்படவேண்டிய ஒருவராக இருப்பார். குறிப்பாக நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களது பணி உயிரை பணயம் வைக்கும் ஒன்றாகவே இருந்துவந்திருந்தது.அவ்வகையில் நின்று நிலைத்து ஊடகப்பணியாற்றிய மிகக்குறைவான ஊடகவியலாளர்களுள் மக்கள் காதரும் ஒருவராக இருந்திருந்தார்.அத்துடன் புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கவிரும்பும் இளம் சமூகத்தினரிற்கு மக்கள் காதர் நிச்சயமாக நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்துவந்திருந்தார்.
தனது வயோதிபத்தின் போதும் ஒதுங்கியிராது ஊடகத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அவர் இயலாமையின் மத்தியிலும் ஊடகத்துறை சார்ந்து பயணிப்பதில் காட்டிய ஆர்வம் நல்லதொரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கும் மன்னார் ஊடக நண்பர்களிற்கும் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
யாழ்.ஊடக அமையம்
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார்.
நீண்ட நாற்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர்.
பல வருடங்களுக்கு முன்னர் ‘மக்கள்’ என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடாத்தியதால் ‘மக்கள் காதர்’ என்னும் சிறப்புப்பெயரைப் பெற்றுக்கொண்டார். பத்திரிகை நிருபராகவும் நீண்காலமாகப் பணிபுரிந்து வந்த இவர் கருத்துக்களைத் துணிந்து தெரிவிக்கக்கூடியவராக இருந்து வந்ததோடு அதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் ஆளானவர்.
வடமாகாண ஆளுநர் விருது உள்ளிட்ட பல விருதுகளைத் தனதாக்கிக்கொண்ட இவர் மன்னார் தமிழ்ச்சங்கம் ஒரு கட்டத்தில் துவண்டு கிடந்த போது அது மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கு நின்றுழைத்தவர்களுள் ஒருவர்.
தொடர்ந்தம் மன்னார் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியவர். இவர் மூத்த இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களின் சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love