குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் தற்போது கணவன் மனைவி ஆகிய இரண்டு தாதியர்கள் மட்டுமே பணியில் இருப்பதனால் வைத்திய சேவையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதோடு கணவன் மனைவியான தாதியர்களும் பல்வேறு நெருக்கடிக்குள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரம் வைத்தியசாலை கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக அதிகளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்ற வைத்தியசாலையாக காணப்படுகிறது. இ்நத நிலையில் குறித்த வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் மட்டுமே கடமையில் இருப்பதனால் இவர்களில் ஒருவர் மாறி ஒருவரே கடமையாற்றுவதனால் முழுமையான சேவையினை வழங்க முடியாதுள்ளது.
அத்தோடு, இவர்கள் கணவன் மனைவி என்பதனால் குடும்பத்தில் இடம்பெறுகின்ற எந்த நிகழ்வுக்கும் இருவரும் சேர்ந்து விடுமுறை எடுத்துச் செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளமையினால் இவர்களும் மன உளைச்சலுக்குள் உள்ளாகியுள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே ஓய்வுபெற்ற தாதியர் ஒருவரை மீள்நியமனம் பெற்றுத்தரலாம் என கூறி மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட போதும் அவருக்கு உறுதியளித்தப்படி ஐந்து மாதங்களுக்கு மேல் மீள்நியமனமோ கொடுப்பனவுகளோ வழங்கப்படாது விட்டமையினால் அவரும் பணியிலிருந்து கடந்தமாதம் விலகிச் சென்று விட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் அவர்களிடம் வினவிய போது தர்மபுரம் வைத்தியசாலையில் நான்கு தாதியர்கள் கடமையில் இருக்க வேண்டும் ஆனால் இருவர் மாத்திரமே உள்ளனர் இது தொடர்பில் நாம் உரிய இடங்களுக்கு அறிவித்திருகின்றோம் எனத் தெரிவித்தார்