ஈராக் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மதகுருவான , மக்தாதா பதே கட்சி தலைவர் ஹைதி அல்-அம்ரி உடன் கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளார். அங்கு கடந்த 12-ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும் பதே கட்சி கூட்டணியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களிலும் பதே கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்ற அதேவேளை பிரதமர் அபாடி தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இந்தநிலையில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைந்தது.
இதனால் அதிக இடங்களில் வென்ற மக்தாதா கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்த நிலையில் பதே கட்சித்தலைவர் ஹைதி அல்-அம்ரியுடன் நடத்தப்பட்ட பல தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் ஆட்சியமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதனால் பிரதமராக முடியாது எனினும்; புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி என்பதும் குறிப்பிடத்தக்கது