இஸ்ரேல் எல்லையை அண்மித்துள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டமை தொடர்பாக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அண்மையிலி; அறிவித்திருந்தமையினைத் தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டநிலையில் இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க நேற்றையதினம் ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் கூடியபோது இந்த உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் போராளிகள் தான் காரணம் என, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு ஆதரவாக 8 நாடுகளும் அதற்கு எதிராக 120 நாடுகள் வாக்களித்தன. 45 நாடுகளின் உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், காஸா வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான இஸ்ரேல் அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது