காவற்துறை நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாக வாக்குமூலம் வழங்க கோத்தாபயவுக்கு உத்தரவு…
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உறுதிகளுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர் மற்றும் சட்டமா அதிபர் அகிய இரு தரப்புக்கும் இடையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதுடன், அவை எழுத்து மூலம் நீதிமன்றத்தின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மனுதாரரான கோத்தாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 25ம் திகதி காவற்துறை நிதி மோசடி பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.