குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸைப் போல, நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது, வேறுவேறு அமைச்சுப் பொறுப்புகளில் தேவையில்லாத தலையீடுகளை மேற்கொள்கின்றனர்’ என்று, தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ‘அவ்வாறான தேவையில்லாத தலையீடுகளால், ஆளும் தரப்பு தடுமாறுகிறது’ என்றும் கூறினார்.
‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக்கியதன் பின்னரே, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார். புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடக மையத்தில் நேற்று (14.06.18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்துத் தெரிவிக்கையில்,
‘அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூங்குவது போல நடித்துக்கொண்டிருப்பதால் அவர்களை எழுப்ப முடியாதுள்ளது’ என்றார். ‘ஒன்றிணைந்த எதிரணியில், ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாரை ஆதரிக்கின்றாரோ, அவரையே நாமும் ஆதரிப்போம்’ எனத் தெரிவித்தார்.
‘ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிறுத்தப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்படும்’என்று தெரிவித்த அவர், ‘சிறீP லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவவுள்ளனர். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியுள்ள சிலர், எங்களோடு இணைய உள்ளனர்’ என்றார்.