பிரித்தானியாவில் வாடிக்கையாளர்கள் வருகை குறைவடைந்துள்ளதால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிநடவடிக்கைகள் அனைத்தினையும் இணையம் மூலம் மேற்கொள்வதனால் மக்கள் நேரடியாக வங்களுக்கு செல்வது குறைவடைந்து விட்டமையினால் இவ்வாறு வங்கிக்கிளைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் பிரித்தானியாவில் கடந்த 2015-ல் இருந்து 2018 வரையான 3 வருடங்களில் மட்டும் 2900 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தற்போது மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவது 40 சதவீதம் குறைவடைந்துள்ள அதேவேளை இணையம் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வது 73 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நட்வெஸ்ட் 635 கிளைகளையும் எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும், லொய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடியுள்ளன.
மேலும் ஐக்கிய ராச்சியத்திலேயே ஸ்கொட்லாந்து பகுதியில்தான் அதிக அளவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.