வடகொரியாவுடன் இணக்கமான சூழல் உருவாகிவரும் நிலையில் தென்கொரியாவுடன் வழக்கமாக நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரியா தீபகற்பத்துக்கு உட்பட்ட கடல்பகுதி மற்றும் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
சிங்கப்பூர் நகரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையே அணு ஆயுத ஒழிப்பு உடன்பாடு ஏற்பட்ட பின்னர், வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் இனி போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆண்டுதோறும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பங்குபெறும் போர் பயிற்சி நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சியில் பங்கேற்க 17 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்தநிலையில் இவ்வாறு கூட்டு போர் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையும் கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகள் மேற்கொள்வது பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது