குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மல்லவராயன் கட்டு பகுதியில் அமைந்துள்ள ஆயுள் வேத வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக போதிய அளவு அவசிய மருந்துகள் இல்லாமையினால் அங்கு செல்லும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக ஊடகங்களினூடாகவும், மக்களினாலும் வெளிக்கொண்டு வரப்பட்ட நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நேற்று செவ்வாய்கிழமை(19) குறித்த வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்தார்.
இதன் போது குறித்த ஆயுள் வேத வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாமை உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த வைத்தியசாலை பூநகரி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்ற நிலையில்,அதற்கான மருந்து வகைகளை பூநகரி பிரதேச சபையே பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் பூநகரி பிரதேச சபையின் செயலாளரை சுகாதார அமைச்சர் தொடர்பு கொண்டு வினவிய போது நிதிப்பற்றாக்குறை மற்றும்,கொழும்பில் இருந்து மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளுவதியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளமையினாலேயே இவ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,விரைவில் மருந்து பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பூநகரி பிரதேச சபையின் செயலாளர் சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி தேவைக்காக உடனடியாக மருந்து பொருட்களை வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்திடம் இருந்து பெற்று கொடுத்து உதவுமாறு வடமாகாண சுதேச வைத்திய ஆணையாளருக்கு அவசர அறிவுருத்தல் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.