தனிப்பட்ட குற்றங்கள் புரியும் மத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பௌத்த மத குருமார்களுக்கு பிரத்தியேக நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டம் யாருக்கும் எவ்வித தனிப்பட்ட அந்தஸ்த்தும் வழங்காது எனத் தெரிவித்த அவர் பாரிய பரப்பினை கொண்ட பௌத்த மதத்தை பாதுகாக்க வேறுபல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
ஞானசார தேரருக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – தலதா அதுகோரல
ஞானசார தேரருக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் தொடர்பில் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மஹா சபையின் தலைவர் கெபாடபிடிய ராவுல தேரரினால் முன்வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் காவி உடையினை நீக்கும் அதிகாரம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளருக்கோ, ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கோ கிடையாது எனவும் குறித்த தேரர் உறுப்புரிமையுடைய சங்க சபைக்கும் பீடத்திற்குமே அதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மகாநாயக்க தேரரின் விசேட அறிவுறுத்தலுக்கமைவாக தேரரின் காவியுடைய நீக்குவது குறித்து பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகத்திற்கு இயலுமை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் போது சிறைக்கு செல்லும் எந்தவொரு நபராக இருந்தாலும் அவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது சிறைச்சாலை சட்டத்தில் தெளிவாக குறிப்படப்பட்டுள்ளது.
சிறைச்சாலை சட்டத்தின் 106 ஆவது பிரிவின் பிரகாரம் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் எந்தவொரு கைதிகளுக்கும் சீருடை வழங்கப்பட வேண்டும்.எனவே சிறை தண்டனை அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரருக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.