இந்திய வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்வதற்காக அமுலாக்கத்துறை சார்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையி;ல் அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமுலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.
நிதி மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி, வழக்கு விசாரணை முடிந்த பின்னரே முறைகேட்டில் ஈடுபட்டவரின் சொத்துகளை அமுலாக்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியும் எனினும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்தின் படி தப்பியோடிய குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
எனவே இந்த சட்டத்தின்படி மல்லையாவை தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான 12,500 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்குமாறு அமுலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை நீதிமன்றில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். அமுலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால், புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நபர் மல்லையாவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.