சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா ( Emmerson Mnangagwa) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். சிம்பாப்வேயில் அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா உரையாற்றியிருந்தார்.
ஜனாதிபதி எம்மர்சன் தனது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது அவரை நோக்கி குண்டு ஒன்று வீசப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு ஜனாதிபதி மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்கள் அவரை ஒருபக்கமாக இழுத்து காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன