(PTI6_23_2018_000098B)
மகாராஷ்டிராவில் ஒரே ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 5,000 முதல் 25,000 ரூபா வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பொறுப்புடன் பயன்படுத்துவதை மேம்படுத்த விரும்புகிறோம். எனவேதான் சேகரிக்க, ஒழுங்குபடுத்த முடியாத மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்தோம். என்றாலும் மாற்றுப் பொருட்கள் முழுமையாக சந்தைக்கு வரும் வரை சில விதிவிலக்குகளும் அளித்துள்ளோம் என இத்தடை குறித்து அம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த முயற்சி வெற்றிபெறும். மக்கள் சிரமமின்றி புதிய பழக்கத்துக்கு மாறுவதை உறுதி செய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம். தடை செய்யப்படாத சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இவை தெருக்களில் வீசப்படாமல் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யவே இந்த வரி விதிக்கப்படுகிறது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.