குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.சிறையில் இருந்த நபர் யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் திருடினார் என யாழ்.நீதிவான் நீதிமன்றில் யாழ். காவற்துறை வழக்கு தாக்கல் செய்த விசித்திர சம்பவம் நடைபெற்று உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு இருந்தது. அது தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் யாழ். காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறை ஒருவரை கைது செய்து இவரே மோட்டார் சைக்கிளை திருடினார் என யாழ்.நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து , அவரை மன்றில் முற்படுத்தினார்கள்.
அதன் போது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட தினத்தில் குறித்த நபர் பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார் என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்பிலான பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபருக்கு மன்று உத்தரவிட்டது.
அந்நிலையில் இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீள யாழ்.நீதிவான நீதிமன்றில் நீதிவான் எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் மீது தொடரப்பட்ட வழக்கு சோடிக்கப்பட்ட வழக்கு எனவும், அது தொடர்பில் இரு காவற்துறை உத்தியோகஸ்தர் மீதும் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அறிக்கை சமர்ப்பித்தார். அதனை அடுத்து நீதிவான். சந்தேக நபரை வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து உத்தரவிட்டார்.