200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவி கொலை வழக்கில் தம்மை கைது செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொலை செய்வோம் என தாம் மிரட்டியதனை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதேவேளை, குறித்த வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்த, தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணையும் இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.அதன் போது பதில் நீதிவான் குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா ? என கேட்ட போது சந்தேக நபர்கள் ஆம் என பதில் அளித்தனர். அதனை அடுத்து அடுத்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 9ம் திகதிக்கு பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் முன்னதாக ஒன்பது சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யபப்ட்ட நபர்கள் இந்த வருட ஆரம்பத்தில் தம்மை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஒரு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த வழக்கில் கைது செய்து உள்ளதாகவும், தாம் இந்த வழக்கில் இருந்து சுற்றவாளிகள் என தீர்க்கப்பட்ட பின்னர் குறித்த தமிழ் பொலிசாரை கொலை செய்வோம் என நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், பிறிதாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. அந்நிலையில் கடந்த 15ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் போது குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் எடுப்பதற்கு குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் அனுமதி வழக்கி இருந்தார்.
அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ஒன்பது சந்தேக நபர்களிடம் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் அன்றைய தினம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் தம் மீதான குற்ற சாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
Spread the love