கிராமத்தில் எல்லோருக்கும் பொதுவான கிணற்றில், தண்ணீர் எடுத்ததை ஒரு பிரச்சனையாக்கிய கிராம பஞ்சாயத்தினர், தலித் குடும்பத்தை இரண்டு ஆண்டுகள் கிராமத்தைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
இன்னமும் தலித் மக்களை ஊரைவிட்டு தள்ளிவைக்கமுடியும் என்ற பழைய தீண்டாமை கால தீர்ப்பை வழங்கியுள்ள இச்சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் நடந்துள்ளது.
இதுகுறித்து அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏஎன்ஐயிடம் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் மருமகளுக்கும் ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் இடையே கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தது ஒரு பிரச்சனையாக இருந்தது. இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு பிரச்சனை கலவரத்தில் முடிந்தது. அதனை அடுத்து கிராம சபையில் கூடி பஞ்சாயத்து பேசினர்.
கிராமத்தில் கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் எங்களை இரண்டு ஆண்டுகள் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கினர். இதனை அடுத்து எங்களுக்கு ரேஷன் நிறுத்தப்பட்டது. எங்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். வைத்தியர்களும் எங்களுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்திக்கொண்டனர். உள்ளூர் மளிகை உள்ளிட்ட கடைக்காரர்கள் அனைவரும் எங்களுக்கு எதுவும் தரமுடியாது” என கூறிவிட்டனர்.
இவ்வாறு குடும்பத்தைச் சேர்ந்தவர் கூறினார். திகம்கார் காவல்துறை தானாக முன்வந்து கிராம பஞ்சாயத்தினர் வழங்கிய இந்த ஹைதர்கால தீர்ப்பை விசாரிக்க முடிவெடுத்துள்ளது.
திகம்கார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜெயின் இவ்வழக்கை, உதவி கோட்ட காவல் அலுவலரிடம் விசாரணை செய்வதற்காக ஒப்படைத்துள்ளார். விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபின் தலித் வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.