மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதிஒதுக்கீட்டில் களுத்துறை மாவட்டத்தின் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள் மக்களின் பாவனைக்கு நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை ) கையளிக்கப்பட்டன.
மேலும்; 10 இலட்சம் பெறுமதியான கொங்கிரிட் பாதையும், பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தினை அதிகரிப்பதற்கான ‘டிகிரி சக்தி’ போசணை பிஸ்கட் வழங்கும் திட்டமும் புதிய முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் தோட்டபுற சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள 2-5 வயதுகுட்பட்ட சிறார்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இவ்நிகழ்வில் சுகாதார, போசணை மற்றும் சுதேஷ அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட வித்தான, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.