குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஆலயத்திற்கு சொந்தமான ஞானவைரவர் விளையாட்டு மைதான காணி விவகாரத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பாரியளவிலான தொழில் முயற்சி ஒன்றுக்கு குறித்த காணி வழங்கப்பட்டு சுற்று மதிலும் அமைக்கப்பட்டு வந்த நிலையில் ஆலய நிர்வாகம் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்து காணியினை மீண்டும் தங்கள் வசம் பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் குறித்த காணியின் ஒரு பகுதியினை தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு ஆலய நிர்வாகமும் பிரதேச பொது மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். நான்கு தடவைகள் நில அளவை மேற்கொண்டு தனியார் ஒருவருக்கு பிரித்து வழங்கும் முயற்சியும் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் காணியை வழங்கி விட்டு மிகுதி கால் ஏக்கர் அளவிலான பரப்பளவை தனியாரு ஒருவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையினை வடக்கு மாகாண காணி ஆணையாளர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர், ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
அந்த வகையில் இன்றைய தினம்(02) கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை அளவீடு செய்து ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்த பின்னர் மிகுதி காணியை தனியாருக்கு வழங்கும் வகையில் எல்லை கற்களையும் பதித்துள்ளனர்
மேற்படி இந்த தீர்மானத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகியோரும் தங்களின்அனுமதியை வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது