குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக தான் வழக்கு தவணைக்கு சமூகமளிக்க வில்லை என சந்தேக நபர் ஒருவர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு தவணைக்காக சந்தேக நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றுக்கு சமூகம் அளித்துள்ளார். குறித்த சந்தேக நபருக்கு பிறிதொரு வழக்கில் , நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிடியாணையை நிறைவேற்றும் நோக்குடன் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தவணைக்கு வந்த குறித்த நபரை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர்.
அதன் போது தனக்கு வேறு வழக்கு உள்ளதாகவும் தான் அந்த வழக்குக்காக தான் இன்றைய தினம் சமூகம் அளித்துள்ளேன் என கூறி குறித்த நபர் நீதிமன்றினுள் சென்றுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் மதிய நேர இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்ட வேளை குறித்த நபர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த போது காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டு உள்ளானர்.
அதன் போது தனக்கு இன்னும் வழக்கு முடியவில்லை என கூறிய போது காவல்துறையினர் அதனை செவிமடுக்காது கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் குறித்த நபருக்கு காவல்துறையினர் கன்னத்தில் அறைந்தார்கள் என குற்றம் சாட்டப்படுகின்றது. அதனை அடுத்து குறித்த நபர் காவல்துறையினின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அன்றைய தினம் குறித்த நபரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , அவரது மனைவி மன்றில் முன்னிலையாகி காவல்துறையினர் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் மன்றில் தெரிவித்தார். அதனை அடுத்து வழக்கினை நேற்றைய தினம் திங்கட்கிழமைக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் மன்றில் தோன்றி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடயம் தொடர்பில் மன்றில் தெரிவித்தார்.
அன்றைய தினம் தான் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காத்தமைக்கு யாழ்ப்பாண காவல்துறையினரின் அச்சுறுத்தலே காரணம் என நீதிவானிடம் தெரிவித்தார். அதனை அடுத்து சந்தேக நபரின் வாக்கு மூலத்தினை பெற்று அது தொடர்பில் விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் உத்தரவிட்டார்.