அமெரிக்காவில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியாக சுமார் 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க நீதிமன்றம் அளித்த காலக்கெடுவிற்குள் இந்த சோதனை நடவடிக்கைகயை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசர் தெரிவித்துள்ளார். காவல் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் சுமார் 100 பேர் 5 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த யூன் 26; திகதி வழங்கிய தீர்ப்பொன்றில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நீதிமன்றம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை 14 நாட்களிலும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை 30 நாட்களிலும் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது