போர் நடக்கும் நாடுகளில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய துணைப் பிரதிநிதி தன்மயா லால் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.சபையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய குழந்தைகளைப் பாதுகாக்கும்போது நாளைய மோதல்கள் தடுக்கப்படும் என்ற நிலை உருவாகும். உலகின் பல நாடுகளில் போர் நடக்கும் நிலையில் லட்சக்கணக்கான குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
போர் நடக்கும் நாடுகளில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐ.நா. சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த முயற்சிகள் அனைத்துக்கும் இந்தியா துணை நிற்கும் என தன்மயா லால் தெரிவித்துள்ளார். மேலும்; ஐ.நாவினால் தீவிரவாத இயக்கங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகள் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகின்றன.
குழந்தைகளைக் கொல்லுதல், காயப்படுத்துதல், கடத்துதல், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் மீது தாக்குதல் என தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குhல்களினால் உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.
தீவிரவாத இயக்கங்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் சமூகத்தில் நல்லநிலைக்குக் கொண்டு வர இந்தியா பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. அவர்களின் சமூக, பொருளாதார மறுசீரமைப்புக்கு உரிய நடவடிக்கைகளை நாம் வலுப்படுத்தவேண்டும் எனவும் தன்மயா லால் தெரிவித்துள்ளார்.