இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளவேண்டும்…
மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான நெஸ்பி சாமி கூறியுள்ளார்.
இலங்கைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய நாடுகள் சபையால் கூறுவது போன்று 40,000 பொது மக்கள் கொலை செய்யப்படவில்லை. சிலர் அந்தத் தொகை 100,000 இலட்சம் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கூறுகின்றனர். எனினும் தரவுகளின் படி அது 5000 முதல் 6000 வரை என்பதுவே சரியானதாக இருக்கும்.
இலங்கையில் இடம்பெற்றது என்ன என்பது சம்பந்தமாக அப்போதே நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஆம் அது ஒரு யுத்தம். எனினும் அங்கு கூறப்படுவது போன்று, சித்திரவதை இடம்பெற்றதாக நம்பத்தகுந்த விடயங்களை காண முடியவில்லை.
இலங்கை யுத்த செயற்பாடுகளில் ஈடுபட்ட காலத்திலேயே ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன அதிக மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அது தவறான விடயம் என்று நான் நினைக்கவில்லை.
இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளவேண்டும் என, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றிடம் நான் கோரியுள்ளேன். காரணம் இலங்கையர்களுக்கு இதில் சம்பந்தமில்லை.
நான் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களிடம் மூன்று சந்தர்ப்பங்களில் இந்த சித்திரவதை சம்பந்தமாக சாட்சிகள் இருக்கின்றதா என்று கேட்டிருக்கின்றேன். காரணம் அவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். எனினும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் கிடைத்த பதில் இல்லை என்பதே. தேவையற்ற செயற்பாடுகள் இலங்கையில் ஒரளவுக்கு இருந்த போதிலும் கூறப்படுகின்ற அளவுக்கு சித்திரவதைகளை இடம்பெறவில்லை என்றே அவர்கள் கூறினர்.” என தெரிவித்துள்ளார்.
1 comment
எதோ ஒரு ஆதாயமின்றிப் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான திரு. நெஸ்பி சாமி இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கவில்லை, என்றே எண்ணத் தோன்றுகின்றது. இவர் கூறுவது உண்மையானால், போர் நடந்த காலத்தில் அது தொடர்பில் அதிக ஆர்வம் செலுத்திய இவருக்குப் பல உண்மைகள் புரியாது போனமை விந்தையே?
1. ஐ நா மனித உரிமைகள் சபைப் பணியாளர்களையே இலங்கை அரசு யுத்தப் பிரதேசத்தில் இருந்து விரட்டியபோது, ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியப் பணியாளர்களால் மட்டும் அங்கு எப்படி மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது?
2. இறுதி நேர யுத்த வலயத்தில் சிக்குண்ட மக்களின் எண்ணிக்கை 60000 முதல் 70000 வரைதான் இருக்கும், என்று அரசு சொன்னபோது, அங்கு கடமையாற்றிய அரச பணியாளர்கள் அதை மறுத்திருந்தார்கள் என்பதாவது, அக்கறை காட்டிய இவருக்குத் தெரியுமா? மேலும், அங்கு சிக்குண்டிருந்தவர்கள் 350,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், என்பதைப் போர் முடிந்த பின் சர்வதேசமே பார்த்ததே! அதாவது இவருக்குத் தெரியுமா? 3.5 லட்சம் மக்கள் எப்படி 60 ஆயிரம் மக்களாகச் சித்தரிக்கப்பட்டார்களோ, அதே போன்றுதான் 1 லட்சம் வரையான கொலையுண்டவர்களை அரசு 5 முதல் 6 ஆயிரமாகக் காட்ட முயலுகின்றது. அதற்குச் சாட்சியாகத் திரு. நெஸ்பி சாமியை இலங்கை அரசு தெரிவு செய்திருக்கிறது, என்பதே உண்மை!
3. அதிக சித்திரவதைகள் இடம்பெற்றதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லையாம்! உண்மைதான்! அதிக சிரத்தை எடுத்து சாட்சியில்லா யுத்தமொன்றை முன்னெடுத்திருந்த அரசு, ஆதாரங்களை வெளிப்படுத்த மட்டும் எப்படி அனுமதித்திருக்குமென இவர் நம்புகின்றார்?
ஆக, திரு.நெஸ்பி சாமி எதற்காகவோ, எதையோ மூடி மறைக்க முயலுகின்றார், என்பதை மறுக்க முடியாது.