குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் குறித்த டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
டெங்கு நோயின் தாக்கத்தினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் நோயாளர் ஒருவர் இன்று உயிரிழந்த நிலையில், வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் மன்னார் எமில் நகர் பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கத்தினால் கடந்த இரு மாதங்களில் அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற டெங்கு நோயாளர்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு வைத்தியசாலையினுடைய இயக்குனர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நோய்த்தடுப்பு பிராந்திய வைத்திய அதிகாரி ஆகியோருடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
உடனடியாக குறித்த நோய்த் தொற்றுகையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பு நடவடிக்கையாக நோயைக் காவுகின்ற நுளம்பு குடம்பிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ந்த நுளம்புகளை அழிப்பதற்கான புகைகளை அடையாளம் காணப்பட்ட இடங்களில் விசுருவதில் இருந்து ஏனைய தடுப்பு விடையங்களை மேற்கொள்ளுவது தொடர்பாகவும், வைத்தியசாலையில் உள்ளவர்களில் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டு வருபவர்கள் நோயின் தாக்கத்தினுடைய ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிப்பது தொடர்பான வழிவகைகளை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
-வைத்தியசாலை நிர்வாகத்திலும் நோய் தடுப்பு பிரிவுகளிலும் இதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரமாக குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உரிய தரப்பினருக்கு பணித்துள்ளேன்.
தேவை ஏற்படும் பட்சத்தில் வேறு மாவட்டத்தில் இருந்து இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆளனிகளையும் ஏனைய உபகரணங்கள் தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்றயை தினம்(13) டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்த நோயளியின் இறப்பு தொடர்பில் உடனடியாக விசாரணைகளுக்கு மேற்கொள்ள பணித்துள்ளேன்.
-குறிப்பாக டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது வரை நடைபெற்ற விடயங்களை விசாரணை மூலம் அறிய கூறியுள்ளேன். -வைத்திய சிகிச்சை அல்லது வேறு முறைகளில் தவறுகள் எதுவும் இடம் பெற்றுள்ளதா?என்பது தொடர்பில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வைத்தியசாலை பணிப்பாளருக்கு கூறியுள்ளேன்.
அவ்வாறு குறைகள் அல்லது தவறுகள் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.2010 ஆம் ஆண்டிற்கு பிறகு மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது.
ஒரு வீதமான உயிரிழப்பைக் கூட மன்னார் மாவட்டத்தில் சந்திக்கவில்லை.ஆனால் துரதிஸ்ரமாக 8 ஆண்டுகளில் இன்று டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.இது ஒரு கவலைக்குறிய விடையம்.இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தார்.