யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன எனவும், அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு நேற்று (13) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரச காணிகள் மிக குறைவாகவே உள்ளது. 99 வீதமான காணிகள் தனியாரின் காணிகள். மேலும் 541 குடும்பங்கள் இன்னும் நலன்புரி நிலையத்தில் வசிக்கின்றனர்.
காணிகள் இல்லதாவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சிடம் உள்ள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை மாவட்ட செயலகம் முன்னெடுக்கும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.