குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாட்டின் தெற்கில் ஹிட்லர் ஒருவர் ஆட்சிக்கு வந்தால், நாடு எந்த திசையை நோக்கி செல்லும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஸவின் நம்பிக்கை வட்டத்துள் இருப்பவருமான குமார வெல்கம கேள்வி எழுப்பியுள்ளார். களுத்துறையில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விஜயகலா வடக்கிற்கு சென்று எமக்கு பிரபாகரன் தேவை என்கிறார். பிரபாகரன் ஜனநாயக தலைவரா?. பிரபாகரன் என்பவர் சர்வாதிகாரி. அதேபோல் தெற்கில் உள்ள தமக்கு ஹிட்லர் ஒருவர் வேண்டும் என்கின்றனர்.
வடக்கில் சர்வாதிகாரி ஒருவரை கோருகின்றனர். தெற்கில் ஹிட்லர் ஒருவரை கோருகின்றனர். இப்படி நடந்தால், நாடு எந்த திசையில் பயணிக்கும். அப்படி நடந்தால்,மக்களுக்கு வாழ முடியுமா?. இரவில் நித்திரை கொள்ள முடியுமா?.
அன்று அந்த இரண்டு அரசாங்கங்களையும் விமர்சித்தால் இரவில் நித்திரை கொள்ள முடியாது. கிராமத்தில் இருந்த மனுஷனுக்கு என்ன நடந்தது என்பது ஊர் பொலிஸாருக்கும் தெரியாது. இதனால், நாங்கள் சர்வாதிகார ஆட்சியை விரும்பவில்லை என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை குமார வெல்கமவை அரசாங்கம் பயமுறுத்தி, தனக்கு தேவையான வகையில் பயன்படுத்துவதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளராக செயற்பட்டு வரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் அஜித் பிரசன்ன அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள குமார வெல்கம, அஜித் பிரசன்ன ஒரு பைத்தியகாரன் என விமர்சித்துள்ளார்.
அஜித் பிரசன்னவுக்கு பதிலளிக்கும் தேவை எனக்கில்லை. அந்த மனுஷன் தனது கிராமத்தை வேறு பிரதேசத்திற்கு சென்று குடியேறியவர். 5 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாத முழு நாடும் அறிந்த பைத்தியகாரன். பைத்தியகாரனுடன் நான் ஏன் பேச வேண்டும் என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.