எதிர்க்கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் இவ்வாரம் சபாநாயகருடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதன்போது தமது அணிக்கு 70 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்படவேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்கப்படவேண்டும். கூட்டு எதிரணி தனி அணியாக செயற்பட்டுவருகின்றது.
தற்போது கூட்டு எதிரணியில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 16 பேரைக் கொண்டுள்ள தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் இது தொடர்பில் சபாநாயகரை சந்தித்து, பல தடவைகள் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவ்வாரம் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.