அண்ட்ரொய்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி இணைய பயன்பாட்டில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் முயற்சித்ததாக கூறி ஐரோப்பிய ஒன்றியம் அந்நிறுவனத்துக்கு 4.34 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளநிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அண்ட்ரொய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக முறைப்பாடு எழுந்தது.
இதன் மூலம் தன்னுடைய கூகுள் குரோம் மற்றும் கூகுள் தேடுபொறியின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் எனவும் மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அபராத தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது