அச்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை – காவற்துறையினரின் செயற்பாடு குறித்தும் அதிருப்தி… யாழ்ப்பாணத்தில் இருந்து – பாலன் – சுப்பிரமணியன்….
கடந்த 19.07.2018 அன்று இரவு 9.30 மணியளவில் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதிக்கு வரும் பருத்தித்துறை வாயிலூடாக குருநகரைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலை 30 ஆம் இலக்க விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டார். எனினும் நால்வரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இவ்விடயத்தை 24 ஆம் விடுதியில் காவலில் இருந்த சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நால்வரும் திருப்பியனுப்பப்பட்டனர். அவர்கள் திரும்பும்போது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தலையில் கொட்டனால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தலையில் படுகாயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவசர சிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போதும் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் உடனடியாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டு சந்தேகத்துக்குரியவர்கள் காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவரால் தாக்குதலுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். எனினும் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார். கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்திய நபரை காவற்துறை விடுவித்தமையானது வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இரவு வேளைகளில் விபத்துக்களின்போதும் வாள்வெட்டு முதலான தாக்குதல் சம்பவங்களின் போதும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மீறி உள்ளே வருவதால் இரவு கடமையில் இருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே அச்சம் நிலவுகின்றது.
மாலை 6.00 மணிக்குப் பின்னர் பார்வையாளர் எவரும் வைத்தியசாலைக்குள் நுழைவது தடுக்கப்பட்ட போதும் அடாவடியில் ஈடுபடுவோர் அத்துமீறி நுழைவது வைத்திய சேவைக்கு அச்சுறுத்தலான விடயமாகும். வைத்தியசாலைக்குள் காவற்றுறையினருக்கு தங்கும் விடுதி உள்ளபோதும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வியப்பளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.