குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனின் வழிகாட்டுதலிலும்,நேரடி பங்கேற்புடனும் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலையில் இந்த ஆண்டு க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்காக பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமர்வும், ஆசிரியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை அவர்களின் இடத்திலேயே தீர்த்து வைப்பதற்குமான மாபெரும் நடமாடும் சேவையும் இன்று வடமராட்சி கல்வி வலயத்தில் இடம்பெற்றது.
முன்னதாக வடமராட்சி கல்வி வலயத்தில் 2018 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவர்கள் எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்புக்கள் இருக்கின்றது என்பது பற்றியும், மாணவர்கள் உயர்தரத்திற்கு செல்லும் வாய்பை அதிகரிக்கவும் பாடசாலை அதிபர்களுக்கு புள்ளி விபரத்தகவல்களுடன் விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.30 வரை இடம்பெற்றது.
தொடர்ந்து மாலை 2.00 மணிக்கு வடமராட்சி கல்வி வலயத்தில் கடமையாற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக ரீதியிலான குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவை இடம்பெற்றது. இன்றைய நடமாடும் சேவைக்கு 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய அதிபர்களுக்கான செயலமர்விலும்,நடமாடும் சேவையிலும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், மாகண கல்விப்பணிப்பாளர் உதயகுமார்,பிரதி மாகாண கல்விப்பணிப்பாளர்,கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ் மற்றும் மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள்,கல்வி அமைச்சின் அதிகாரிகள்,வடமராட்சி வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.