குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்மராட்சி பகுதியில் கோஸ்டி மோதலுக்கு சென்ற 13 இளைஞர்களை பளை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ ஐ ‘ குழு எனவும் ‘ சவா ‘ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக் குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் 13 இளைஞர்கள் ‘ வடி’ ரக வாகனத்தில் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் கோஸ்டி மோதலுக்கு தயாராக எழுதுமட்டுவாள் பகுதிக்கு வருகின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாம காவல்துறையினருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம காவல்துறையினர் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , காவல்துறையினரை கொண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.
அது குறித்து பளை காவல்துறையினருக்கு, கொடிகாம காவல்துறையினர் அறிவிதத்தை அடுத்து , பளை காவல்துறையினர் மருதங்கேணியில் உள்ள பளை பொலிசாரின் காவலரணுக்கு அறிவித்துள்ளனர். அதனை அடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை காவல்துறையினர் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் , வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.கைது செய்யபட்ட 13இளைஞர்களையும் பளை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.