இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய, பாதுகாப்பு தரப்பு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும், சேவையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான செயல்முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரி பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளரான அவர், 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறாமை, பாதுகாப்பு தரப்பினர் புரியும் குற்றங்களுக்கு தண்டனை வழங்காமை, பொதுமக்களின் செயற்பாட்டில் காணப்படும் இராணுவ தலையீடு, குறிப்பாக இராணுவத்திலுள்ள பெரும்பான்மை சிங்கள தேசியவாதிகளின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல காரணிகள் தமிழ் சமூகத்தின் மத்தியில் பகைமையை நிலைநாட்டுவதற்கே வழிவகுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான பிரதான தளமாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.