குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு தற்போது வரை எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இன்று(26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் திட்டம் ஒன்று வரையப்பட்டு அது தொடர்பில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது ஆனால் குறித்த திட்டம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை அவை அடுத்தவாரமே அனுப்பப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. எனவே இதுவரைக்கும் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை
ஆனால் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்த பின்னர் நான் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் சுவாமிநாதன் ஆகியோருடன் பேசியதற்கு அமைவாக அவர்களால் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு 150 மில்லியன் நிதி புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 மில்லியன் நிதி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அது வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுவிட்டது
இதன் பின்னர் கிளி நொச்சிக்கான நகர அபிவிருத்தியினை நோக்காக கொண்டு மாதிரி சந்தை கட்டடம் ஒன்ற 767 மில்லியன் ரூபாவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வரையப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு கொண்டு சென்ற போது அங்கு நிதி அமைச்சர் சந்தை அமைப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டது பின்னர் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது இது பெருமளவு நிதி என்பதனால் தேசிய திட்டமில் திணைக்களத்தின்அனுமதி பெறப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதற்கான பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு வாராத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவுறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இன்றை திகதி வரை இது சம்மந்தமான எந்த நிதி ஒதுக்கீடும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி கடைத்தவுடன்தான் இது செயற்பாடு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் எனத் தெரிவித்த ஆளுநர் இந்த புதிய திட்டமும் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.